புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை 10 நாள் கடற்வழி சாகச பயணத்தில் கடற்படை பிரிவு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுவை என்சிசி தலைமை அலுவலகம் சார்பில் ஆண்டுதோறும் பாய்மர படகு கடல் சாகச பயணம் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பாய்மர படகு கடல் சாகச பயணம் தேங்காய்திட்டு துறைமுகத்திலிருந்து கிளம்பியது. 30 கடற்படை பிரிவு என்சிசி மாணவர்களும், அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இந்த கடல் சாகச பயணத்தை புதுச்சேரி என்சிசி கமாண்டர் அனில் நாட்டியால் தொடங்கி வைத்தார். கடலூர் என்சிசி அதிகாரி ரமேஷ் தலைமை வகித்தார்.
இந்த பயணம் புதுச்சேரியில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பாலையாறு, தரங்கம்பாடி வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்தை அடைகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் புதுவைக்கு திரும்புகின்றனர். மொத்தம் 136 கிமீ கடல் வழி சாகச பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த கடல் பயணத்தின்போது கடற்கரை துப்புரவு, மரம் நடுதல் போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் நடத்துகின்றனர்.