60 லட்சம் ரூபாய் செலவில் சிங்கிரிகுடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயிலுக்கு புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
அபிஷேகப்பாக்கத்தை அடுத்துள்ள சிங்கிரிகுடி கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலுக்கான தேர் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதன் பழமை கருதி புதிய தேர் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. 58 அடி உயரம் கொண்டு, 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இத்தேரின் வெள்ளோட்ட விழா வரும் 6-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் விமல் என்கிற சீனிவாசன் கூறுகையில்,
புதுச்சேரி மற்றும் தமிழக ஆன்மீக பக்தர்களாக பெரிதும் ஈர்க்கப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்ட விழா மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திருத்தேர் விழாவை நடத்த கோயில் அறங்காவலர் குழு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
புதிய தேரை உருவாக்கி வரும் குறிஞ்சிப்பாடி ஸ்தபதி தங்கவேல் கூறுகையில்,
ஏற்கனவே இருந்த பழைய தேர் சிதலம் அடைந்து விட்டது. இதிலிருந்த சிற்பங்கள் அனைத்து பாதுகாப்போடு எடுத்து புதிய தேரில் வைக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பெருமானின் ஐதீகப்படி தேரில் சிலைகள் மற்றும் மணிகள் வைக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக 25 பேர் புதிய தேர் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.